வழக்கு தொடர்ந்தவர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகமாட்டோம்,வக்காலத்துகளை வாபஸ் பெறுவதாக வக்கீல்கள் திடீர் அறிவிப்பு
`தகுதி அடிப்படையில் தீர்ப்பு'- ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி:
வழக்கு தொடர்ந்தவர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகமாட்டோம்,வக்காலத்துகளை வாபஸ் பெறுவதாக வக்கீல்கள் திடீர் அறிவிப்பு
சென்னை, மார்ச்.15-
தகுதி அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனிமேல் வழக்கு தொடர்ந்தவர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகமாட்டோம் என்றும் வக்காலத்துகளை வாபஸ் பெறுவதாகவும் வக்கீல்கள் திடீரென அறிவித்துள்ளனர்.
தகுதி அடிப்படையில் தீர்ப்பு
கடந்த மாதம் 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்திற்குள் வக்கீல்களும், போலீசாரும் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
23-வது நாளாக நேற்று வக்கீல்கள் ஐகோர்ட்டுக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட்டைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் வழக்கு தொடர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, வக்கீல்கள் ஆஜராகாவிட்டாலும் தகுதி அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வழிவகை காண வேண்டும் என்றும் நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நாளை முதல் (திங்கட்கிழமை) இந்த அறிவிக்கை அமல்படுத்தப்படுகிறது.
வக்காலத்து வாபஸ்
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே நேற்று நடநëத தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், வழக்கு தொடர்ந்தவர்களுக்காக இனிமேல் கோர்ட்டில் ஆஜராகமாட்டோம் என்று திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறியதாவது:-
ஐகோர்ட்டு அறிவிக்கை வக்கீல்களின் போராட்டத்தை தூண்டிவிடும் வகையில் உள்ளது.
கடந்த மாதம் 19-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு வக்கீல்கள் நெடுந்தூர பயணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் வக்கீல்கள் உடலளவில், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, எங்கள் மூலம் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்ந்தவர்களுக்காக இனிமேல் கோர்ட்டில் ஆஜராகமாட்டோம்.
மாற்று ஏற்பாடுகள்
வழக்கு தொடர்ந்தவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று கோர்ட்டே கூறிவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளோம். சட்ட உதவி மையத்தின் வக்கீல்களும் கோர்ட்டுகளில் ஆஜராக வேண்டாம். அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் வக்கீல்கள் சங்கம் நிச்சயம் உதவும் என்று உறுதி அளிக்கிறேன். ஐகோர்ட்டு அறிவிக்கை வக்கீல்களை மிரட்டுவதாகவும், நீதிபதிகளின் சுதந்திரத்தைப் பறிப்பது போலவும் இருப்பதால் அதனை உடனே திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு பால்கனகராஜ் பேசினார்.
இதையடுத்து ஏராளமான வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் மாலாவை சந்தித்து, தாங்கள் ஆஜராகும் அனைத்து வழக்குகளிலும் வக்காலத்தை வாபஸ் பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு தொடரும்
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் பேசும்போது, ``வக்கீல்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யும் வரை கோர்ட்டு புறக்கணிப்பும், போராட்டமும் தொடரும். வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் கோர்ட்டில் ஆஜராவதற்கான வக்காலத்துகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள 70 ஆயிரம் வக்கீல்கள் நாளை (திங்கட்கிழமை) வாபஸ் பெறுவார்கள். எனவே, தகுதி அடிப்படையில் வழக்கு நடத்தி முடிவு காண வேண்டும் என்ற அறிவிக்கையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே திரும்பப் பெற வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்க செயலாளர் வேல்முருகன் கூறுகையில், ``ஐகோர்ட்டு சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வலியுறுத்தி சென்னையில் 19-ந் தேதி மாநில அளவிலான கண்டன பேரணி நடத்தப்படுகிறது. அதுவரை ஐகோர்ட்டுக்கு வெளியே வக்கீல்களின் தர்ணா போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்தார்.
Source
http://www.dailythanthi.com/article.asp?NewsID=475056&disdate=3/15/2009

0 comments:
Post a Comment